சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 Jun 2023 6:45 PM GMT (Updated: 8 Jun 2023 6:46 PM GMT)

வெள்ளிமலையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் விபத்துகளை தவிர்க்க அங்குள்ள சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து அங்கு சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட கடைகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சின்னசாமி, கஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கிராமமக்கள் அங்குள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

அப்போது இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் குமரன், கரியாலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடைகள் அகற்றப்பட்டாலும், வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மணிமொழி தலைமையிலான அதிகாரிகள் அகற்றினர். அப்போது சில வணிகர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story