நேரு விளையாட்டு மைதானத்தை ரூ.7¼ கோடியில் சீரமைக்கும் பணி
கோவையில் நேரு விளையாட்டு மைதானத்தை ரூ.7¼ கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோவை
கோவையில் நேரு விளையாட்டு மைதானத்தை ரூ.7¼ கோடியில் சீரமைக்கும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிந்தடிக் ஓடுதளம்
கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ஓட்டப்பந்தய வீரர்கள் பயிற்சி பெற வசதியாக 400 மீட்டர் தூர ஓடுதளம் உள்ளது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் சர்வதேச தரத்தில் பயிற்சி பெறும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டு மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டது.
இந்த சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டதால், சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்தை புதுப்பிக்க அரசு ரூ.7 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிதியில் இருந்து ஓடுதளத்தை சீரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின்
தொடக்க விழாவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ரூ.6 கோடியே 55 லட்சம் செலவில் சிந்தடிக் தளம் சீரமைத்தல், ரூ.65 லட்சத்தில் கழிப்பறை, இருக்கைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கையை கேட்டார். அப்போது அவர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு 2 ஏக்கரில் சிறப்பு மைதானம் வேண்டும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், 32 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கோரிக்கை மனுக்கள்
மேலும், துபாயில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ள மாற்றுத்திறனாளி கிருத்திகா, தனக்கு விமான பயண கட்டணத்தில் சலுகைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து வீரர்கள் தாங்கள் வாங்கிய பதக்கம் மற்றும் கோப்பைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் விளையாட்டு வீரர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் சமீரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், மாவட்ட கராத்தே சங்க தலைவர் வி.எம்.சி. மனோகரன், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.