திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.22 கோடியில் மேம்பாட்டு பணிகள்


திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.22 கோடியில் மேம்பாட்டு பணிகள்
x

திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.22 கோடியில் மேம்பாட்டு பணிகள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

ரெயில்நிலைய மேம்பாட்டு பணி

நாடு முழுவதும் 1300 ரெயில் நிலையங்கள் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 91 நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக 508 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிக்கான தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தனர்.

அதே நேரம் திருப்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே முதன்மை வணிக மேலாளர் (சென்னை) செந்தில்குமார் வரவேற்றார். திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ரெயில் நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். தொடக்கவிழா நிகழ்ச்சியில் பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலமாக திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஸ்கிரீனில் திரையிடப்பட்டது. விழாவையொட்டி அம்ரித் பாரத் திட்டப்பணிக்கு பின்னர், திருப்பூர் ரெயில் நிலையம் எப்படி மாறப்போகிறது என்பது குறித்த வீடியோ ஒளிபரப்பபட்டது.

முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் ரெயில்வே விழிப்புணர்வு தொடர்பான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

பார்க்கிங் வசதி

விழா முடிவில் தெற்கு ரெயில்வே முதன்மை வணிக மேலாளர் (சென்னை) செந்தில்குமார், சேலம் ரெயில்வே கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை அதிகரிக்கப்படும். மேலும் 2 நடைமேடை பகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு புதிய பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். நெரிசலை தவிர்க்க வாகனங்கள் சென்று வர தனி பாதை அமைக்கப்பட்டு, கூடுதலாக உயர்மட்ட பாலம் கட்டப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும். என்றனர்.



Next Story