கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்க சீரமைப்பு பணிகள் தீவிரம்; அமைச்சர் முத்துசாமி தகவல்


கீழ்பவானி வாய்க்காலில் 15-ந் தேதி தண்ணீர் திறக்க சீரமைப்பு பணிகள் தீவிரம்; அமைச்சர் முத்துசாமி தகவல்
x

கீழ்பவானி வாய்க்காலில் வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

ஈரோடு

நம்பியூர்

கீழ்பவானி வாய்க்காலில் வருகிற 15-ந் தேதி தண்ணீர் திறக்க சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

சீரமைப்பு பணிகள்

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்.

தற்போது வாய்க்காலில் பல இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் குறிப்பிட்ட தேதியில் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகளிடையே கேள்வி எழுந்தது.

இரவு பகலாக

இந்தநிலையில் வீட்டுவசதித்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் வகையில் சீரமைப்பு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகின்றன. ஓரிரு இடங்களில் பணிகள் செய்யவேண்டி உள்ளது. அதுபோன்ற இடங்களில் விரைவில் பணியை முடிக்க கூடுதல் வேலை ஆட்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வருகிற 10 அல்லது 11-ந் தேதிக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்துவிடும்.

90 மில்லி பாக்கெட்

டாஸ்மாக் கடையில் 90 மில்லி பாக்கெட்டில் மது விற்பது. கடையை திறக்கும் நேரத்தை மாற்றுவது போன்றவை தற்போதைக்கு இல்லை. அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் உடன்இருந்தனர்.


Next Story