சாலை பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம்: கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்


சாலை பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம்: கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்
x

சென்னை ராயபுரம் அன்னை சத்யா நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை ராயபுரம் அன்னை சத்யா நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், அப்பகுதி மக்களுடன் கொசு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதைதொடர்ந்து நிருபர்களிடம் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

மிக்ஜம் புயலுக்கு பின்னர் சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. கனமழைக்கு பிறகு எந்தவொரு தொற்று நோய் பாதிப்பும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் பொதுமக்களும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. 5 ஆயிரத்து 145 சாலை பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 876 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைத்ததால்தான் வெள்ளநீர் விரைவாக வெளியேறியது. தாழ்வான பகுதிகளில் மோட்டார் மூலமாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, கூடுதல் கமிஷனர் சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.


Next Story