ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்புவதா? - கவர்னருக்கு கி.வீரமணி கண்டனம்


ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்புவதா? -  கவர்னருக்கு கி.வீரமணி கண்டனம்
x

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திரும்பி அனுப்பி உள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டு, ஏறத்தாழ 4 மாதங்கள் - 142 நாள்கள் ஆன பிறகும், ஒப்புதல் தராமலேயே கிடப்பில் போட்டிருந்தார், கவர்னர். தற்போது அதை திருப்பியும் அனுப்பி விட்டார். அதற்குக் காரணம் இந்த சட்டமன்றத்திற்கு அப்படி ஒரு சட்டம் செய்ய அதிகாரம் இல்லையாம். அதை இத்தனை நாள் கழித்து எந்த காவி மரத்திற்குக் கீழ் அமர்ந்து 'ஞானம்' பெற்றாரோ தெரியவில்லை.

இப்போது அதே வாசகங்களுடன் அப்படியே மார்ச் 20-ந்தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவையில் அம்மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200-வது கூற்றின்படி, இவர் கையெழுத்திட்டு அனுப்பித்தானே ஆகவேண்டும்?. அப்போதும் இதைவிட பெரிய வித்தையையும், வியூகத்தையும் செய்ய அவரது ஆலோசகர்கள் யோசிப்பார்களோ?.

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், இந்தப் பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள். பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட்டு மகிழலாம் என்று நினைத்து, வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர். இந்த மண் சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது - கனவுகள் சிதைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story