12 மணி நேர வேலை மசோதாவை முழுமையாக ரத்து செய்க - விஜயகாந்த் வலியுறுத்தல்
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு தேமுதிக தொழிற்சங்கம், ஆளும் கூட்டணி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் 12 மணி நேர வேலை சட்ட மசோதா மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை தேமுதிக சார்பில் நான் வரவேற்கிறேன்.
தொழிலாளர்களின் நலனில் அக்கறை உள்ளது போல் அறிக்கை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின், மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காதது ஏன்?. யாருடனும் கலந்தாலோசிக்காமல் சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றிய பின்னர் பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது.
அதேபோல் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாறலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த சில மணி நேரங்களில், திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் அனுமதி இல்லையென்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளிக்கிறார். இதுபோன்று மாறி மாறி வெளியிடப்படும் அறிவிப்புகளால் தமிழக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. தவறான வழி காட்டுதலின்படி இந்த அரசாங்கம் செயல்படுவது உள்ளங்கையில் நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மக்களுக்கான எந்த ஒரு திட்டங்களும், சட்ட மசோதாக்களும் புதிதாக கொண்டு வந்தால் தமிழக அரசு அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பிறகு அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை முற்றிலுமாக ரத்து செய்யும் வரை தொழிலாளர்களின் நலனுக்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.