மக்களுக்கு பேரிடியை தரும் 'ரெப்போ' வட்டி விகித உயர்வு
ஏழை- எளிய நடுத்தர மக்கள் வங்கிகளின் கடன் தவணைத்தொகை மூலமாகவே வீடு, வாகனம் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
ரெப்போ வட்டி விகித உயர்வு
மாத சம்பளத்தில் பெரும்பாலான தொகையை இதற்கான பட்ஜெட்டுக்காக ஒதுக்குகின்றனர். இப்படி பட்ஜெட் போட்டு ஆசை வாழ்க்கையை வாழும் பலருக்கு ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகித உயர்வு பேரிடியாக அமைந்திருக்கிறது.
'ரெப்போ' என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது. இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக்குழு தான் இந்த ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்து வருகிறது. அந்தவகையில் 6 பேர் கொண்ட இந்த குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பித்துக்கொள்ளும்.
6.50 சதவீதம்
அதன்படி, இந்த குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் குழுவின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், தற்போது 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி வகிதம் 6.50 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 5.75 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 4 சதவீதத்துக்கு வந்தது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருந்தது. அதன் பின்னர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தின் பக்கம் கவனத்தை திருப்பியது. இதன் தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியது.
கூடுதல் தவணைத்தொகை
தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து, தற்போது 6.50 சதவீதத்துக்கு வந்துள்ளது. வட்டி விகித உயர்வால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் தவணைத் தொகை செலுத்த நேரிடும்.
உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் தவணைத் தொகையில் வாங்கி இருக்கும் தனி நபரின், தவணைத்தொகை குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்களுக்கு வீடு, வாகனம் கடன் தவணைத்தொகை உயருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இதுகுறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர், வங்கி ஊழியர் சங்கம், சிறு, குறு தொழில் சங்கம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-
சிரமத்தை கொடுக்கும்
பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன்:- பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள். இந்த நடவடிக்கையால் ஓரளவுக்கு பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் ரெப்போ வட்டி உயர்வு கடன் வாங்கியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். ஒரு காலாண்டு காலத்துக்கு பொறுத்து இருந்து நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால், வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கலாம். இடைப்பட்ட காலத்துக்குள் 6 முறை உயர்வு என்பது, வங்கியாக இருக்கட்டும், தனிநபராக இருக்கட்டும் அவர்களுடைய நிர்வாக கணக்குகளை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதே போக்கு நீடிக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்.
சுமை அதிகரிப்பு
அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த கோமதி:- வங்கிகளில் கடன் வாங்கி தேவைகளை பூர்த்தி செய்கிறோம். அவ்வாறு வாங்கும் கடன்களை செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலம் நிர்ணயித்து பயணிக்கும் போது, திடீரென வட்டி விகிதம் உயர்த்துவது என்பது ஏற்க முடியாது. இதனால் என்னை போன்ற நடுத்தர மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும். வீட்டு செலவுகளை பார்ப்பதா? அல்லது வங்கி கடன்களை செலுத்துவதில் வாழ்நாள் முழுவதும் கவனம் செலுத்துவதா? என்ற எண்ணமே குடும்ப மகிழ்ச்சியை சீர்குலைத்து விடுகிறது. மக்கள் மீது சுமையை ஏற்றாமல் இருந்தாலே, பெரும் புண்ணியம்.
மல்லூர் ஏர்வாடி வாணியம்பாடியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செந்தில்:- கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் தற்போது தான் சகஜநிலைக்கு திரும்பியுள்ளனர். வீடு, வாகன கடன்களுக்கு வட்டி உயர்வு என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் தொல்லையால் தவிக்கும் பலருக்கு இது மேலும் மன அழுத்தத்தைதான் கொடுக்கும். நான் வங்கியில் கடன் பெற்று புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வருகிறேன். தற்போது வாகன கடன் வட்டியை உயர்த்திருப்பது எனக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மாதம் பட்ஜெட் போட்டு குடும்பத்தை வழிநடத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இது நிச்சயம் பேரிடிதான். இதனை உடனடியாக குறைக்க வேண்டும்.
'குருவி தலையில் பனங்காய்'
தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்க தலைவர் கே.மாரியப்பன்:- தொடர் ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகளில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்த வட்டி விகிதமான 6.25 சதவீதத்தில் இருந்து 9.75 சதவீதமாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு தட்டுதடுமாறி, மீண்டும் வங்கி கடன்களின் உதவியுடன் தொழில்களை நடத்துவதற்கு சிரமப்பட்டு வரும் சூழ்நிலையில், 2.50 சதவீதம் கூடுதல் வட்டி என்பது 'குருவி தலையில் பனங்காய்' வைத்தது போல் ஆகிவிடும். திடீர் திடீரென்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நிலையான கொள்கை முடிவு எடுக்காமல், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது மிகவும் மோசமான நடவடிக்கை. கடன் வழங்கும்போது என்ன வட்டி விகிதத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறதோ, அந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதற்கும் அதே வட்டி விகிதத்தில் வசூலிக்க வேண்டும். அப்போதுதான் சிரமம் இல்லாமல் இருக்கும்.
ஏமாற்று வேலை
சேலம் பெரியபுதூரில் சலூன்கடை நடத்தி வரும் பாலசுப்பிரமணியம்:- ஒரு வங்கியில் வீடு கடனாக பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.9 லட்சம் வாங்கியுள்ளேன். அதற்கு மாதம் ரூ.18,924-ஐ தவணை செலுத்தி வருகிறேன். சலூன் கடையில் போதிய வருமானம் இல்லை. தாறுமாறாக உயர்ந்து செல்லும் விலைவாசிக்கு மத்தியில், இப்போது வீடு, வாகன வங்கி கடன் தவணைத் தொகை உயர்வு அதிர்ச்சியைதான் கொடுக்கிறது. திட்டமிட்டு பட்ஜெட் ஒதுக்கி குடும்பத்தை நடத்தி வரும் என்னை போன்ற பட்ஜெட் குடும்பத்துக்கு, இந்த உயர்வு நிச்சயம் வேதனையைதான் தரும். எனவே, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகித உயர்வை குறைத்து, மக்களின் தலைவலியை போக்க வேண்டும்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன்:- பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகித உயர்வு என்பது ஏமாற்று வேலை. பணவீக்கத்தை குறைக்க பல்வேறு நிலைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்த வட்டி விகித உயர்வால், கார்ப்பரேட் கடன்களுக்கு உயர்வு இல்லை என்பதுதான் வேடிக்கை. ஏற்கனவே வங்கிகளில் கடன் பெற்றவர்களும், புதிதாக கடன் வாங்குபவர்களுக்கும் வட்டி விகிதம் அதிகரிக்கும். மாதம் சம்பளம் பெறுவர்களில் 90 சதவீதம் பேர் ஏதாவது ஒரு வங்கியில் கடன் பெற்று மாத தவணை தொகையை செலுத்தி வருகிறார்கள். இந்த வட்டி விகிதம் அதிகரிப்பு என்பது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும். ஆனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள், வங்கிகளில் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. அவர்கள் வங்கிகளில் பேரம் பேசுவார்கள். எனவே, வட்டி உயர்வை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.