மக்களுக்கு பேரிடியை தரும் 'ரெப்போ' வட்டி விகித உயர்வு
ஏழை-எளிய நடுத்தர மக்கள் வங்கிகளின் கடன் தவணைத்தொகை மூலமாகவே வீடு, வாகனம் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
ரெப்போ வட்டி விகித உயர்வு
மாத சம்பளத்தில் பெரும்பாலான தொகையை இதற்கான பட்ஜெட்டுக்காக ஒதுக்குகின்றனர். இப்படி பட்ஜெட் போட்டு ஆசை வாழ்க்கையை வாழும் பலருக்கு ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகித உயர்வு பேரிடியாக அமைந்திருக்கிறது.
'ரெப்போ' என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை பயன்படுத்துகிறது. இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைக்குழு தான் இந்த ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்து வருகிறது. அந்தவகையில் 6 பேர் கொண்ட இந்த குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை கூடி தனது பணக்கொள்கையை புதுப்பித்துக்கொள்ளும்.
6.50 சதவீதம்
அதன்படி, இந்த குழுவின் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் குழுவின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில், தற்போது 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் தற்போது ரெப்போ வட்டி வகிதம் 6.50 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 5.75 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 4 சதவீதத்துக்கு வந்தது. இதனால் வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருந்தது.
அதன் பின்னர், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பணவீக்கத்தை சமாளிக்க, ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தின் பக்கம் கவனத்தை திருப்பியது. இதன் தொடர்ச்சியாக ரெப்போ வட்டி விகிதம் அதிகரிக்க தொடங்கியது.
கூடுதல் தவணைத்தொகை
தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்து, தற்போது 6.50 சதவீதத்துக்கு வந்துள்ளது. வட்டி விகித உயர்வால், ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகன கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் தவணைத் தொகை செலுத்த நேரிடும்.
உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு ரூ.20 லட்சம் வீட்டுக்கடன் தவணைத் தொகையில் வாங்கி இருக்கும் தனி நபரின், தவணைத்தொகை குறைந்தது ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து, மெல்ல மெல்ல மீண்டு வரும் மக்களுக்கு வீடு, வாகனம் கடன் தவணைத்தொகை உயருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பொது மக்கள், பொருளாதார ஆலோசகர் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் வருமாறு:-
சிரமத்தை கொடுக்கும்
பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன்:- பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவதாக சொல்கிறார்கள். இந்த நடவடிக்கையால் ஓரளவுக்கு பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் ரெப்போ வட்டி உயர்வு கடன் வாங்கியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும். ஒரு காலாண்டு காலத்துக்கு பொறுத்து இருந்து நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால், வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கலாம். இடைப்பட்ட காலத்துக்குள் 6 முறை உயர்வு என்பது, வங்கியாக இருக்கட்டும், தனிநபராக இருக்கட்டும் அவர்களுடைய நிர்வாக கணக்குகளை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதே போக்கு நீடிக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும்.
பேரிடியாக அமைந்துள்ளது
அரியலூர் மாவட்டம் பொய்யூர் அரசு பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி:-
தற்போதைய காலகட்டங்களில் வீடு கட்டக்கூடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வங்கிகளில் பெறக்கூடிய கடன் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் தொடர் ரெப்போ வட்டி விகித உயர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் பேரிடியாக அமைந்திருக்கிறது. மிக விரைவாக வளர்ந்து வரக்கூடிய இந்திய பொருளாதாரத்தில் எல்லோருக்கும் வீடு என்ற திட்டத்தில் தேங்க நிலைக்கான சூழ்நிலை உருவாகும். தற்போதைய காலகட்டத்தில் ஊதியம் ஓரளவு தண்ணிறைவு அடைந்திருந்தாலும் கூட அனைத்து பொருட்களின் பொருளாதார வளர்ச்சி குறியீடு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் விலைவாசியும் உயர்ந்தே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கக்கூடிய சூழ்நிலையில் விலைவாசிகளையும் கட்டுப்படுத்தி கட்டுமான பொருட்களின் தரத்தினையும், நம்பகத் தன்மையாக இருக்க செய்ய வேண்டிய காலகட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. இல்லாதவரிடம் பிடுங்கி இருப்பவர்களிடமே கொண்டு சேர்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.
தா.பழூரை சேர்ந்த வணிக நிறுவன உரிமையாளர் அறிவழகன்:- எங்களைப்போன்ற நடுத்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்து வருகிறோம். ஏற்கனவே பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை கொரோனா காலத்திலும் தொடர்ந்து இருந்தது. பொதுமக்களின் வாங்கும் சக்தி இன்னும் அதிகரிக்காத நிலையில் ரிசர்வ் வங்கி ரெப்ேபா வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது வங்கிகளில் நாங்கள் பெற்றிருக்கும் கடன்களின் மீது எதிரொலிக்கும் என்றே தெரிகிறது. இதனால் ஏற்கனவே நாங்கள் கணக்கிட்டு வங்கிக்கு செலுத்தி வரும் தொகையை விட கூடுதலாக தொகை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
திரும்ப பெற வேண்டும்
அரியலூரை சேர்ந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் கலியபெருமாள்:- கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நேற்று முன்தினம் வரையிலான இடைப்பட்ட 9 மாதங்களில் 6-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இ.எம்.ஐ. மெல்ல மெல்ல உயர்ந்துள்ளது. ரெப்ேபா வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக உயர்த்தியுள்ளது. அதேபோல் வாடிக்கையாளர்கள் செலுத்திய டெபாசிட் தொகைக்கு வட்டி உயரவில்லை. ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்கள் அரசுக்கு அதிகமாக வருமான வரி செலுத்தி வரும் நிலையில் இந்த வட்டி உயர்வு எல்லோரையும் பாதிப்படைய செய்யும். இதனால் கூடுதல் செலவுகள், கடன் சுமைகள் மற்றும் கூடுதலாக இ.எம்.ஐ. கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ரெப்ேபா வட்டி விகித உயர்வை அனைத்து வங்கிகளும் பின்பற்றும். இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள். அவர்கள் வீடு கட்டுவது அல்லது வாகனம் வாங்குவது கேள்விக்குறியாகி விடும். எனவே வட்டி விகித உயர்வை திரும்ப பெற வேண்டும்.
வாகன கடன்
உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்:- ரிசர்வ் வங்கி அவ்வப்போது போடும் உத்தரவுகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் ஏறக்கூடும். தனியார் நிறுவனத்தில் வாகன கடன் வாங்குவது எளிது. அங்கு மீட்டர் வட்டி போல் எகிறும். ஆனால் வங்கியில் கடன் வாங்குவது கடினம். ஆனால் பாதுகாப்பானது. தனியார் நிதி நிறுவனங்களில் வாகன கடன் வாங்கும் உற்சாகத்தில் சிலர் எந்த ஆவணங்களையும் படிக்காமல் கையெழுத்து போட்டு விடுவதால் சிக்கலில் தவித்து வருகிறார்கள். தனியார் நிறுவனத்தில் கடனை அடைத்தாலும் தடையில்லா சான்று கிடைப்பது கடினம். ஆனால் பொதுத்துறை வங்கிகளில் தடையில்லா சான்று நிமிடத்தில் கிடைத்துவிடும். இந்தநிலையில் ரெப்ேபா வட்டி விகிதம் உயர்வதால் கூடுதலாக இ.எம்.ஐ. கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதனால் வாகன கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த 9 மாதங்களில்...
2019 ஜூன் - 5.75 சதவீதம்
2019 ஆகஸ்டு - 5.40 சதவீதம்
2019 அக்டோபர் - 5.15 சதவீதம்
2020 மார்ச் - 4.40 சதவீதம்
2020 மே - 4 சதவீதம்
2022 மே - 4.40 சதவீதம்
2022 ஜூன் - 4.90 சதவீதம்
2022 ஆகஸ்டு - 5.40 சதவீதம்
2022 செப்டம்பர் - 5.90 சதவீதம்
2022 டிசம்பர் - 6.25 சதவீதம்
2023 பிப்ரவரி - 6.50 சதவீதம்