குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ஆர்.என்.ரவி


குடியரசு தின விழா: சென்னை மெரினாவில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 26 Jan 2023 8:18 AM IST (Updated: 26 Jan 2023 10:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றினார்.

சென்னை,

நாட்டின் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா, மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறுகிறது.

காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவரின் காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அதைத்தொடர்ந்து 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். பின்னர் அதிகாரிகளை கவர்னருக்கு சம்பிரதாயப்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசிய கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது அந்த பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. தொடர்ந்து ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தி வருகின்றனர். அதை அவர் ஏற்று வருகிறார்.

1 More update

Next Story