100 நாள் வேலையை மீண்டும் தொடங்க கோரிக்கை
கபிலர்மலை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் காரணமாக நிறுத்தப்பட்ட 100 நாட்கள் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பரமத்திவேலூர்
சிறுத்தைப்புலி
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை, வெள்ளாளபாளையம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், தெருநாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.
சிறுத்தைப்புலி கால்நடைகள் மற்றும் தெருநாய்களை இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் கால் தடங்களை வைத்து இந்த மேற்கண்ட கிராமங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகினர். சிறுத்தைப்புலியை பிடிக்கவும் அதன் இருப்பிடத்தை கண்டறியவும் பழங்குடி இனத்தை சேர்ந்த வனக்காப்பாளர்கள், வனத்துறையினருடன் இணைந்து சிறுத்தைப்புலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கல்குவாரியில் பதுங்கல்?
செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் உள்ள குவாரியில் ஆய்வு மேற்கொண்ட போதுஅங்கு சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்தனர். இந்தநிலையில் மாவட்ட வனச்சரகர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைப்புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் 18 கண்காணிப்பு கேமராக்களையும், 3 கூண்டுகள் வைத்தும் சிறுத்தைப்புலியை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தைப்புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் சிறுத்தைப்புலி எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை என்பதால் அது இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா அல்லது கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டதால் குவாரி பகுதியிலேயே தங்கி வெளியே வராமல் உள்ளதா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
100 நாட்கள் வேலை
இருப்பினும் இப்பகுதியில் வனத்துறையினர் தொடர்ந்து சிறுத்தைப்புலி குறித்து இரவு பகலாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இல்லாததால் மீண்டும் 100 நாட்கள் வேலை பணியை தொடர சம்பந்தப்பட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என 100 நாட்கள் வேலை பணியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.