பூசாரிகளுக்கு மாத ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை
பூசாரிகளுக்கு மாத ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கோவில் பூசாரிகள் நலச்சங்க கூட்டம், சிவகங்கை தென் மண்டல தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருவள்ளுவர் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் வாசு, மாநில செயலாளர் சங்கர், பொருளாளர் சுந்தரம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம், சிவகங்கை மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட துணை தலைவர் சரவணன், துணைச் செயலாளர் குமார், ஒருங்கிணைப்பாளர் பாண்டி, ஆலோசனை குழு தலைவர் பசும்பொன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடத்தும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு தற்பொழுது வழங்கும் மாத ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். நல வாரியத்தின் மூலம் பூசாரிகளுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் கிராமப்புற வசதியற்ற கோவில்களில் கூழ் வார்க்கும் வைபவம் தடையின்றி நடைபெற இந்து சமய அறநிலையத்துறை மூலமாக விலை இல்லாமல் கேழ்வரகு, அரிசி உள்ளிட்ட தானியங்கள் வழங்க வேண்டும். அத்துடன் ஓய்வு ஊதியம் பெறும் வயது முதிர்ந்த பூசாரிகளுக்கு வாழ்நாள் சான்றிதழை தாலுகா அலுவலகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய தேவையான புத்தகத்தை விலை இல்லாமல் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.