ஒரு நாளைக்கு முன்பாகவே மீன்பிடிக்க செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும்
தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ஒரு நாளைக்கு முன்பாகவே மீன்பிடிக்க செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
ராமேசுவரம்,
தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ஒரு நாளைக்கு முன்பாகவே மீன்பிடிக்க செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
தடைக்காலம்
ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் மீன்கள் இனப்பெருக்க காலமாக உள்ளதால் 61 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதையடுத்து மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றது. தடைக்காலம் முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் மராமத்து பணிக்காக கடற்கரையில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளை சீரமைத்து படகுகளில் புதிதாக வர்ணங்கள் பூசி அதை கடலில் இறக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். கடற்கரையில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளையும், ஓரிரு நாளில் கடலில் இறக்குவதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புதிய வலைகளை பின்னுதல், அதில் இரும்பு சங்கிலி, இரும்பு குண்டுகளை கோர்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
போதுமானதாக இல்லை
இதுகுறித்து மாவட்ட அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா கூறும்போது, 61 நாள் தடை காலத்தில் விசைப்படகு ஒன்றை கரையில் ஏற்றி மீண்டும் கடலில் இறக்குவதற்கு மட்டும் 50 ஆயிரம் செலவாகும். இதை தவிர படகுகளில் புதிய வர்ணம் அடிப்பது, என்ஜின் வேலை பார்ப்பது என அனைத்து வேலைகளையும் சேர்த்தால் ஒரு படகுக்கு மட்டும் குறைந்தபட்சம் ரூ.3-ல் இருந்து ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
தடைகாலத்தில் மீனவர் ஒருவருக்கு அரசால் ரூ.5000 வழங்கப்படுவது போதுமானதாக இல்லை. தடைகாலம் வருகிற 14-ந் தேதியுடன் முடிகிறது. 15-ந் தேதி காலை 6 மணி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தடை காலம் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பே ராமேசுவரத்தில் மீன் பிடிக்க செல்லாமல் நிறுத்தி விட்டோம்.
மீனவர்கள் எதிர்பார்ப்பு
எனவே, இந்த ஆண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு முன்பாகவே அதாவது 14-ந் தேதி காலை 6 மணி முதல் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும். இதுகுறித்து கலெக்டர் மற்றும் மீன்துறை இயக்குனரிடமும் வலியுறுத்தியுள்ளோம்.
இது தொடர்பாக அரசிடம் பேசி தகவல் தெரிவிப்பதாகவும் மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆண்டு ஒரு நாளைக்கு முன்பாகவே மீன் பிடிக்க செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.