20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய கோரிக்கை


20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய கோரிக்கை
x

20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பின்னர் சாமி.நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குறுவை சாகுபடி பணிகளுக்காக காவிரி ஆற்றில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது.

கூடுதல் கொள்முதல் நிலையம்

அதற்கான அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதுடன் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 என விவசாயிகளிடம் பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை வயல்களுக்கு சென்று கொள்முதல் செய்யும் மொபைல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு தொடங்க வேண்டும். தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் 20 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story