சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை


சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை
x

திருச்சுழியில் சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழியில் சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவமனை

திருச்சுழி மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான மக்கள் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக திருச்சுழியில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது.

இங்கு திருச்சுழி, தமிழ்பாடி, சித்தலக்குண்டு, கேத்தநாயக்கன்பட்டி, சித்தலக்குண்டு, கண்டமங்கலம், உடையனாம்பட்டி, சென்னிலைகுடி, பள்ளிமடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகள் நோய் வாய்ப்பட்டால், அவைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இங்கு தான் அழைத்து வருகின்றனர்.

தேங்கி நிற்கும் மழைநீர்

இந்தநிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக கட்டப்பட்ட திருச்சுழி கால்நடை மருத்துவமனை கட்டிடமானது 10 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த கால்நடை மருத்துவமனை கட்டிடம் தற்போது மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

மேலும் கட்டிடத்தில் உள்ளேயும், வெளியேயும் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்து உள்ளதால் அங்கு கால்நடைகளை கொண்டு சென்று நிறுத்தி வைக்க போதுமான வசதிகள் இல்லாததால் சிரமம் ஏற்படுவதாக கிராமமக்கள் கவலையுடன் கூறினர்.

பராமரிப்பு பணி

மேலும் மழைக்காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் மருத்துவமனை கட்டிடத்திற்குள் நுழைந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு நிழற்கூடங்களை அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story