சேதமடைந்த மதகை சீரமைக்க கோரிக்கை


சேதமடைந்த மதகை சீரமைக்க கோரிக்கை
x

கொரடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் சேதமடைந்த வாய்க்கால் மதகை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்கண் கிராமத்தில் ஆறு கோண வாய்க்கால் என்ற பெயரில் ஒரு வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் எண்கண், முகந்தனூர், காப்பனாமங்கலம், அரசுவனங்காடு போன்ற கிராமங்களை சேர்ந்த சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மதகு கஜா புயலால் சேதமடைந்தது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விளைநிலங்களுக்கு முறையான நீர்ப்பாசனம் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

சேதமடைந்த மதகு

இந்த மதகை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்டநிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை மதகு சரி செய்யப்படவில்லை என்று அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ஆறுகோண வாய்க்காலில் உள்ள மதகு கஜா புயலால் சேதமடைந்தது. இதனை சரி செய்யக்கோரி அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்களின் பாசனம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து சட்டமன்றமனுக்கள் குழுவிற்கும் மனு அனுப்பப்பட்டு உள்ளது. ஆகவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாய்க்கால் மதகை சரிசெய்து கொடுக்க சம்பந்தப்பட்டஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story