தேஜஸ் ரெயில் அரியலூரில் நின்று செல்ல வேண்டுகோள்
தேஜஸ் ரெயில் அரியலூரில் நின்று செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரான அரியலூரில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும் சிமெண்ட் ஆலைகள், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. இதனால் பல மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், கல்வியாளர்கள், உற்பத்தியாளர்கள், டாக்டர்கள், மாணவர்கள் அரியலூருக்கு வந்து செல்கின்றனர். ஆத்தூர்- பெரம்பலூர்- அரியலூர்-தஞ்சாவூர் என தேசிய நெடுஞ்சாலை என்.எச். 136- ஒட்டியுள்ளது அரியலூர் ெரயில் நிலையம் மட்டுமே. இதனால் அந்த சாலையையொட்டி உள்ள ஊர்களை சேர்ந்தவர்களும் பக்கத்து மாவட்டமான பெரம்பலூரில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் பஸ்களிலும், கார்களிலும் அரியலூர் வந்து ரெயிலில் பயணம் செய்கின்றனர். வைகை, பல்லவன் ரெயில்களில் தினமும் அரியலூரில் இருந்து பலர் பயணம் செய்கின்றனர். சென்னை, மதுரைக்கு விரைவாக பயணம் மேற்கொள்ள பல பயணிகள் விரும்புகின்றனர். அரியலூர் ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.7 கோடிக்கு டிக்கெட் விற்பனை ஆகியுள்ளது. எனவே அரியலூர் ரெயில் நிலையத்தில் தேஜஸ் ெரயில் நின்று சென்றால், பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். தென்னக ரெயில்வேக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே அதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.