அருங்காட்சியக பணிகளை துரிதப்படுத்த கலெக்டருக்கு கோரிக்கை
விழுப்புரத்தில் அருங்காட்சியக பணிகளை துரிதப்படுத்த கலெக்டருக்கு கோரிக்கை
விழுப்புரம்
விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் நேற்று மாவட்ட கலெக்டர் பழனியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வரலாற்று சிறப்புகள் வாய்ந்த விழுப்புரம் மாவட்டத்தில், தொன்மை சின்னங்களை பாதுகாத்திடும் வகையில் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கடந்த 2021-ல் தொல்லியல்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதையடுத்து 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.5 கோடியில் விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியானது. இதன் பின்னர் 4.8.2022 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் "விழுப்புரம் மாவட்டத்தில் புதிய அரசு அருங்காட்சியகம் ரூ.5 கோடியே 60 லட்சம் செலவில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி" வழங்கப்பட்டது. விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளிவந்து ஓராண்டை கடந்துவிட்டது. ஆனாலும் இதுநாள் வரை அருங்காட்சியகத்திற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கு வருவாய்த்துறையின் முன்நுழைவு அனுமதி பெற வேண்டியது அவசியமாகிறது. இதற்கு ஆவண செய்து விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.