அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம், அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் தியாகராஜன் முன்னிலை வகித்து ஆண்டு வரவு, செலவு கணக்கினை வாசித்தார். முன்னதாக முத்துக்குமார் வரவேற்று பேசி, ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்வராஜ், பாரி வள்ளல், முகமது சுல்தான் உள்ளிட்டோர் நுகர்வோர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை பற்றி விளக்கி கூறினர். ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் அலுவலகம் இயங்க ஆணை பிறப்பித்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் அலுவலகம் இயங்கவில்லை. அதனை விரைவில் இயங்கச்செய்ய வேண்டும். ஜெயங்கொண்டத்தில் அரசு கலைக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்து, கட்டிடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டத்தில் அரசு விரைவு பஸ் சேவை தொடங்கி திருப்பதி, வேளாங்கண்ணி, திருச்செந்தூர், ராமேசுவரம், கன்னியாகுமரி, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சேவையை தொடங்க வேண்டும். கும்பகோணம், ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் பாதை அமைத்து ரெயில்கள் விட தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் மற்றும் இதர பணியிடங்களை சுகாதார துறை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.