மகளிர் உரிமைத்தொகை போன்று விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுகோள்


மகளிர் உரிமைத்தொகை போன்று விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுகோள்
x

மகளிர் உரிமைத்தொகை போன்று விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது ராஜூ பேசுகையில், மக்காச்சோளம், பருத்தி போன்ற விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேப்பந்தட்டையில் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடம் அமைக்க வேண்டும், என்றார். நீலகண்டன் பேசுகையில், மாவட்டத்தில் கூடுதலாக விதை சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்க வேண்டும். கூட்டுறவுத்துறை வங்கிகளில் தகுதியான 195 விவசாயிகளுக்கு நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார்.

விவசாய மின் இணைப்பு

ராஜா சிதம்பரம் பேசுகையில், மாவட்டத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 475 விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும். சிறுகுடல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிலம் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். மாவட்டத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயத்துக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்றார். ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், பெருமத்தூர் விவசாயிகளுக்கு முறையான பட்டா வழங்காததை கண்டித்து வருகிற 31-ந்தேதி குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் பேராட்டம் நடத்தப்படும், என்றார்.

விவசாயத்துக்கு காவிரி நீர்

செல்லத்துரை பேசுகையில், விவசாயிகளுக்கு 60 வயது நிறைவடைந்தவுடன் மாதம் ரூ.5 ஆயிரம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் கொள்முதல் செய்யும்போது ஆரம்பத்திலேயே தரம் கண்டறிந்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என்றார். பெரியசாமி பேசுகையில், விவசாயிகள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி தெரணி சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், என்றார். ஜெயராமன் பேசுகையில், திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து காவிரி நீரை பெரம்பலூர் மாவட்டத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு வந்து, விவசாயத்துக்கு பயன்படுத்த அரசுக்கு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும், என்றார்.

ராமலிங்கம் பேசுகையில், விவசாயிகளுக்கு தேவைப்படும் போது போதிய அளவு உரங்கள் கிடைக்க செய்ய வேண்டும். தற்போது யூரியா தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டும், என்றார். சக்திவேல் பேசுகையில், கரும்பு பயிரில் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும், என்றார். வரதராஜன் பேசுகையில், கரும்பு சாகுபடியில் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காதது, அதிகரிகளின் அஜாக்கிரதையை காட்டுகிறது, என்றார்.

பனை விதை-பழ மரக்கன்றுகள்

ரமேஷ் பேசுகையில், உரத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். விவசாயம் அல்லாத காலங்களில் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும். மணிவண்ணன் பேசுகையில், வேதா நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். மக்காச்சோளத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், என்றார். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்ற கலெக்டர் கற்பகம், அவற்றின் மீது உடனடியாக நடவடிடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் சகோதர துறைகள் மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை கலெக்டர் விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டாா். விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் பனை விதை மற்றும் பழ மரக்கன்றுகளையும், நபார்டு நிதி உதவியுடன் வாலிகண்டபுரம் கே.வி.கே. மூலம் கறவை மாடுகள் வளர்ப்பு மற்றும் பாலில் மதிப்பு கூட்டுதல் குறித்த கையேடுகளையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு மூச்சாக பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். பள்ளி காலை உணவு வழங்கி வரும் தமிழக முதல்-அமைச்சருக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்


Next Story