கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தளமாக சேர்க்க அரசுக்கு கோரிக்கை


கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தளமாக சேர்க்க அரசுக்கு கோரிக்கை
x

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தளமாக சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வனத்துறை சார்பில் உலக ஈரநிலங்கள் நாள் விழா அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஈர நிலங்கள் குறித்தும், அதனால் உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். அப்போது நிலம் என்பது பஞ்சு போன்றது. தண்ணீரை தன்னுள் வைத்துக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கிறது. ஈர நிலங்கள் உள்ள பகுதிகளில் மரங்கள், செடிகள் மற்றும் விவசாயம் செழிப்பாக வளரும். எனவே, நீர்நிலைகள் மற்றும் நிலங்களை மாசுப்படுத்தாமல் பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார். மாவட்ட வன அலுவலர் குகனேஷ் கூறுகையில், அனைத்து வகை உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற தகுதியான இடம் ஈர நிலங்கள் ஆகும். இந்த ஈர நிலங்கள் ராம்சார் தளம் என அழைக்கப்படுகிறது. ஈர நிலங்களை மறு சீரமைத்தல் என்பதுதான் இந்த ஆண்டின் நோக்கம். இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ராம்சார் தளமாக சேர்க்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, ஈரநிலங்களின் மறுசீரமைப்புக்கான நேரம் என்ற தலைப்பில் கடந்த 30-ந் தேதி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இதனைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், வனத்துறையினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story