பக்தர்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை


பக்தர்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
x

வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் வேறு எங்கும் இல்லாத அளவில் துர்க்கையம்மன் சிரித்த முகத்துடன் விஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கும் ஒரே தலம். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறும். இதில் ஆடி பூரம், மாசி மக திருவிழாக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய, மகோதய புண்ணிய காலங்களில் இங்குள்ள சன்னதி கடலில் புனித நீராடி தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு கோபுரவாசல் வழியாக வெளியே செல்ல குறைந்தது 2 மணி நேரமாவது ஆகும். இதில் முதியவா்கள், நீரிழிவு நோயாளிகள் கோவிலை விட்டு வெளியே வந்தாலும் அவா்கள் இயற்கை உபாதையை கழிக்க அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளை நாட வேண்டிய நிலை உள்ளது. கோவிலுக்கு கோவில் அலுவலகம் உள்ளது. இந்த கோவிலில் அலுவலக பணியாளா்கள், கோவில் பணியாளா்கள் என 50 நபா்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களும் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியில் செல்ல வேண்டியுள்ளது. ஆகம விதிகளை மீறாமல் கோவிலுக்கு வெளியே இரண்டு கோபுர வாசல் பகுதியில் கட்டண கழிப்பிடமோ அல்லது இலவசமாகவோ கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர அறநிலையத்துறை அல்லது நகராட்சி நிர்வாகமோ ஆவன செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story