மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பை:
அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின் உச்ச நீர்மட்டம் 118 அடி ஆகும். இந்த அணையின் தண்ணீர் இருப்பை கொண்டு, பெருங்கால் மதகு பாசனம், 40 அடி கால்வாய் பாசனம், 80 அடி கால்வாய் பாசனம் என மூன்று பிரிவுகளின் கீழ் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதில் 80 அடி கால்வாயில் ரீச் கணக்கில் சுழற்சி முறையில் பாசன வசதிக்கு வழிவகை செய்யப்படும். ஆனால் அணையில் 40 அடி தண்ணீர் இருந்தாலே அணையின் அருகில் உள்ள பெருங்கால் பாசன பகுதிகளான மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட 7 கிராமங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
தற்போது அணை நீர்மட்டம் 60 அடியாக இருப்பதால் கார் பருவ சாகுபடிக்காக 40 அடி கால்வாய் மூலம் பெருங்கால் பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். இந்த நிலையில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடவில்லை எனில் 7 கிராம விவசாயிகளும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.