வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க கோரிக்கை
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அண்ணாமலை நகரில் நேற்று நடந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி நெய்வேலியில் வருகிற 16-ந் தேதி போராட்டம் நடத்துவது. தண்ணீர் தராத கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் நஷ்டஈடாக பெற வேண்டும். வடகிழக்கு பருவமழையின்போது பெய்யும் மழைநீரை ஏரி, குளங்களில் தேக்கவும், ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் தூர்வார வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தினேஷ், தங்கமுத்து, மேகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.