தென்கரை வாய்க்காலில் கட்டப்பட்ட பாலத்தை சீரமைக்க கோரிக்கை
குளித்தலை அருகே தென்கரை வாய்க்காலில் கட்டப்பட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் ஊராட்சிக்குட்பட்டது மேலகுறப்பாளையம். இந்த பகுதி வழியாக தென்கரை வாய்க்கால் செல்கிறது. அதன் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டிருந்தது. அந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் அந்த பாலம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு கடந்த 2001-ல் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.இந்த பாலத்தை கடந்தே மேலகுறப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு தேவையான இடு பொருட்கள் கொண்டு செல்வது போன்ற பணிகளையும் பயிர் விளைந்த பின்பு நெல், வாழை போன்றவற்றை அறுவடை செய்து மீண்டும் இந்த பாலம் வழியாகவே கொண்டு சென்று வருகின்றனர்.
இடிந்து விழும் நிலை
இந்தநிலையில் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு திடீரென இந்த பாலத்தின் மேற்பகுதியை தாங்கி நின்ற ஒரு அடிப்பகுதி தூண் உறுதித்தன்மை இல்லாத காரணத்தால் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தின் மேல் பகுதி பாதியாக சரிந்து சேதமடைந்துவிட்டது.இந்தநிலையில் இந்த பாலம் சேதமடைந்த காரணத்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தப் பாலம் முழுமையாக இடிந்து விழும் என்ற காரணத்தால் இந்தப் பாலத்தை மிகவும் அச்சத்துடனேயே தினந்தோறும் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். இந்த பாலத்தை சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் சார்பில் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
இந்தநிலையில் கடந்த மே மாதம் இப்பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை நேரில் பாலத்தை பார்வையிட வைத்தனர். பாலத்தை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சூழ்நிலையில் தற்போதுவரை இந்த பாலத்தை சீரமைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மேலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த பாலத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.