ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தொண்டு நிறுவன கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் துளசீ தாமிர சேசியல் டிரஸ்ட், தாயகம் டிரஸ்ட், பெல் சொசைட்டி ஆகிய தொண்டு நிறுவனங்கள் கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கூட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தனலட்சுமி மற்றும் ஆதரவாளர்கள் நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் நடமாடும் மருத்துவ திட்டம், இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி திட்டம், பெண் குழந்தைகளுக்கான கல்வி வகுப்பு திட்டம், குஷி குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இதயம் காப்போம் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டம், கிராமங்கள் தோறும் சுத்தமான குடிநீர் திட்டம் ஆகிய பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டன. இந்த பணிகள் தற்போது முடங்கி உள்ளன. ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.
மேலும் ஸ்டெர்லைட் தலைவர் அனில் அகர்வால் சட்டத்தின் மூலமாக போராடி வெற்றி பெற நாங்கள் உறுதுணையாக இருப்போம். கடந்த 4 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சட்டப் போராட்டத்துக்கு நீதியரசர்கள் நல்ல முடிவை தர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பல ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர் என்று கூறினர்.