இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x

மெய்யூரில் இடிந்து விழும் நிலையில் இருளர் குடியிருப்புகள் உள்ளன. புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சதுரங்கபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யூர் இருளர் குடியிருப்பில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளில் 250-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வயல் வேலை, கட்டிட வேலை, அரிசி ஆலை என பல இடங்களில் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன. இந்த வீடுகளில் 5 வீடுகளின் மேல் தளம் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டதால் அதில் வசித்து வந்த இருளர்கள் துணிகளால் குடில் அமைத்து வசித்து வருகின்றனர். தற்போது 25 வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.

அந்த வீட்டின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டும், மேல் தளத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் இந்த வீடுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற ஒரு வித பயத்துடன் பழங்குடி இருளர்கள் அந்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

ஒருபுறம் சேதமடைந்த வீட்டில் ஏற்பட்டுள்ள ஓட்டைகளில் பாம்புகள், தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் ஒரு சில வீடுகளில் மேல்தளம் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த வீடுகளில் உள்பகுதியில் கட்டில், சவுக்கு கம்புகள் அமைத்து மேல்தளம் கீழே இடிந்து விழாமல் இருக்க முட்டு கொடுத்துள்ள அவல நிலையையும் காண முடிகிறது. ஒவ்வொரு மழைக்காலங்களிலும் தாங்கள் இங்குள்ள அரசு பள்ளிகளில் தங்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், நிரந்த ஏற்பாடுளை அதிகாரிகள் இதுவரை தங்களுக்கு செய்து தரவில்லை என்று இருளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சிலர் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் விசிக்க விருப்பமில்லாமல் அதன் அருகில் குடில்கள் அமைத்து வசித்து வரும் அவல நிலையையும் காண முடிகிறது.

பல முறை சிதிலமடைந்த வீடுகளை இடித்து புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று தாங்கள் மாவட்ட கலெக்டர், மற்றும் பழங்குடியினர் நலத்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பருவ மழைக்காலம் வருவதற்கு முன்பு இடிந்து விழுந்த மற்றும் சிதிலமடைந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும் என்று மெய்யூர் பகுதி பழங்குடி இருளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story