விஷச்சாராய மரணம் தொடர்பான 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரிக்கை
விஷச்சாராய மரணம் தொடர்பான மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,
சித்தாமூர் மற்றும் அச்சரப்பாக்கம் விஷச்சாராய விவகாரம் தொடர்பான வழக்குகள் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் 2 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவின்பேரில் சித்தாமூர் மற்றும் அச்சரப்பாக்கம் விஷச்சாராய மரணம் தொடர்பான 2 வழக்குகளின் அனைத்து ஆவணங்களும் இன்று செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் சித்தாமூர் மற்றும் அச்சரப்பாக்கம் விஷச்சாராய மரணம் தொடர்பான 2 வழக்குகளை கொலை வழக்குகளாக பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யக்கோரி சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியான செங்கல்பட்டு ஏ.டி.எஸ்.பி. மகேஸ்வரி, தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.