கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற மீட்பு படகு


கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற மீட்பு படகு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

மீன்பிடிக்க செல்லும்போது கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற மீட்பு படகு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மீன்பிடிக்க செல்லும்போது கடலில் விபத்தில் சிக்கும் மீனவர்களை காப்பாற்ற மீட்பு படகு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி, மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, உதவி கலெக்டர் குணால் யாதவ், கன்னியாகுமரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-

மீட்பு படகு

மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகும் மீனவர்களை காப்பாற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மீட்பு படகு வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். நாட்டுப்படகு மற்றும் விசைப்படகிற்கு வழங்கப்படும் மானியத்தை 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் முதலுதவி பயிற்சி அளிக்க வேண்டும்.

குருந்தன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலாவதியான கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புல்லுவிளை பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும். குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுப்புற சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும்.

மண்டல மேலாண்மை வரைபடம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ- மாணவிகளைக் கொண்டு பிப்ரவரி 4-ந் தேதி புற்றுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அரசு பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். கன்னியாகுமரி - சிலுவை நகர் சாலைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும். சிங்காரவேலர் மற்றும் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கான பட்டா குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை குறித்த வரைபடத்தை மீனவ கிராமங்களுக்கு வழங்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் தமிழில் இடம் பெற வேண்டும். குளச்சல் நகராட்சியில் பள்ளிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவலர்கள் மூலம் சரி செய்ய நடவடிக்கை அவசியம் ஆகும். குமரி மாவட்ட கடற்கரை மீனவர்களுக்கு ஐஸ் பெட்டிகள் வழங்க வேண்டும். மீன்பிடி கலன்களுக்கான ஆய்வினை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். அதனை பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்த வேண்டும். மீனவர்களுக்கு கடன் வழங்க மீன்வள வங்கிகள் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து மீனவர்கள் பேசினர்.

நடவடிக்கை

இதற்கு கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் சார்பில் அளிக்கப்பட்டபதில்கள் விவரம் வருமாறு:-

இனி நடைபெறும் மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் அனைத்து துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். கடலில் விபத்திற்குள்ளாகும் மீனவர்களை காப்பாற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மீட்புப் படகு வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கும் விதமாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் காலாவதியான அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புல்லுவிளை பகுதியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீன்வள வங்கிகள்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட தனியாருக்கு சொந்தமான பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியாருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருகிற 4 -ந் தேதி புற்றுநோய் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் அரசு பஸ்களை முறையாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கன்னியாகுமரி- சிலுவை நகர் சாலைப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்.

வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை குறித்த வரைபடம் விரைவில் மீனவ கிராமங்களுக்கு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் தமிழில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளச்சல் நகராட்சியில் பள்ளிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீசார் மூலம் சரி செய்யப்படும். குமரி மாவட்ட கடற்கரை கிராம மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ஐஸ் பெட்டிகள் டாப்கோபெட் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு கடன் வழங்க ஏதுவாக மீன்வள வங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

இவ்வாறு அதிகாரிகள் பதில் அளித்தனர்.


Next Story