வேலை தேடி வந்த 3 சிறுவர்கள் மீட்பு
வேலை தேடி வந்த 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலைய பகுதியில் குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிர்வாகிகள் ரோந்து சென்றனர். அப்போது சென்னையில் இருந்து வந்த ரெயிலில் இறங்கிய 3 சிறுவர்கள் அந்த பகுதியில் செய்வதறியாது திகைத்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தனர். 3 சிறுவர்களையும் மடக்கி பிடித்து விசாரித்தபோது புதுக்கோட்டை மாவட்டம் புலிவலம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்த இலங்கை அகதிகளின் குழந்தைகள் என்பது தெரியவந்தது. 3 பேரும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலை தேடி ராமநாதபுரம் வந்ததாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 3 சிறுவர்களையும் நிர்வாகிகள் ராமநாதபுரம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுடைய பெற்றோரை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். ேமலும் சிறுவர்களை படிக்க வைக்க வேண்டும் என்றும், வேலைக்கு அனுப்ப கூடாது என்று கூறி எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிர்வாகிகள் மூலம் கண்காணித்து சிறுவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய உள்ளோம். இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து 3 சிறுவர்கள் வெளியில் வந்தது குறித்தும், அவர்கள் பள்ளி இடைநின்றது தொடர்பாகவும் விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சத்தியநாராயணா தெரிவித்தார்.