சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீட்டில் பதுக்கிய 55 சாமி கற்சிலைகள் மீட்பு
சென்னையில் 55 தொன்மையான சாமி சிலைகள் மீட்கப்பட்டன. அவை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டவை என்பது பற்றி பெண் ஒருவரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரகசிய தகவல்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது மெயின் ரோடு முதலாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் தொன்மையான சாமி கற்சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த பிரிவின் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, ஆர்.மோகன் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிந்திரன், எழில் விழி, வேண்டாமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன், ஜமிஷ்பாபு, எஸ்.குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
சிலை குவியல் கண்டுபிடிப்பு
தனிப்படை போலீசார் குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினார்கள். இதில் வீட்டின் சுற்றுப்புற பகுதியிலும், மொட்டை மாடியிலும் சாமி சிலைகள் குவியலாக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 55 சாமி கற்சிலைகள் மீட்கப்பட்டன. இந்த சிலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தவை ஆகும். இந்த சிலைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து 55 சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் இந்த சிலைகள் ஆழ்வார்ப்பேட்டையில் இயங்கி வந்த அபர்ணா கலை கூடத்தில் வாங்கி இருப்பது தெரிய வந்தது. இந்த கலைக்கூடம் மறைந்த பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு சொந்தமானது ஆகும். இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வாங்கப்பட்டதா? என்பது குறித்து அந்த பெண்ணிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிலைகள் விவரம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றிய 55 சாமி கற்சிலைகள் விவரம் வருமாறு:-
1. இந்திராணி, 2.வராகி, 3.வீரபத்திரர், 4.தட்சிணாமூர்த்தி, 5. கிராம தேவதை, 6.சாமுண்டா, 7.தட்சிணாமூர்த்தி (உயரம் அதிகம்), 8.அனுமன், 9.மகேஷ்வரி, 10.வைஷ்ணவி, 11.கிராம தேவதை (உயரம் அதிகம்), 12.விஷ்ணு, 13.துர்கா, 14.வராகி (உயரம் அதிகம்), 15.கணபதி, 16.விஷ்ணு லட்சுமியுடன் இணைந்த சிலை, 17. தேவி, 18.லிங்கோத்பவன், 19.கருடா, 20.விஷ்ணு, 21.கணபதி (உயரம் அதிகம்), 22.பிரம்மி, 23.முருகன், 24.புத்தர். 25. விஷ்ணு (உயரம் அதிகம்), 26. அமர்ந்த நிலையில் தேவி சிலை, 27.மகாவீரர், 28.விஷ்ணு (உயரம் அதிகம்) 29. பைரவன், 30..துர்கா தேவி, 31. மகிஷாசுரமர்தினி, 32.மதுரை வீரன், 33.மதுரைவீரன் துணைவியார், 34. உடைந்த நிலையில் விஷ்ணு சிலை, 35.அய்யனார், 36. வீரபத்திரன், 37. சூரியன், 38. மயில், 39. துரக்கை அம்மன், 40. உடைந்த நிலையில் மற்றொரு விஷ்ணு சிலை, 41. சண்டிகேஸ்வரர், 42.யானை, 43.குரு கடவுள், 44.சனிபகவான், 45.சந்திரன், 46. செவ்வாய் கிரக கடவுள், 47.சுக்கிரன் கிரக கடவுள், 48.புதன் கிரக கடவுள், 49. ராகு கிரக கடவுள், 50 முருகன் உடன் இணைந்த துணைவியார், 51.மயில், 52.பிடாரியம்மன், 53.நந்தி, 54.அமர்ந்த நிலையில் புத்தர் சிலை, 55.காளி.
இந்த சிலைகள் எந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது பற்றியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.