சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு


சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையை அடுத்த அன்னூரில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

அன்னூர்

கோவையை அடுத்த அன்னூரில் சாலையோரத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பச்சிளம் குழந்தை சாலையோரத்தில் வீச்சு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாணம்பாளையம், கட்டபொம்மன் நகரில் நேற்று அதிகாலை தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் குப்பை தொட்டிக்கு அருகே கட்டைப்பை ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த தூய்மை பணியாளர்கள் கட்டைப் பையை திறந்து பார்த்தபோது அதில், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி அகற்றாத நிலையில் இருந்துள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் அந்த பச்சிளம் குழந்தையை மீட்டு, உடனடியாக அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் பச்சிளம் குழந்தை சாலையோரத்தில் வீசப்பட்ட செய்தி அறிந்து அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு வந்த அன்னூர் போலீசார் பச்சிளம் குழந்தையை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அன்னூர் சுற்று வட்டார பகுதியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மையங்கிளல் 2 நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? எதற்காக அவர் குழந்தையை சாலையோரத்தில் வீசிச்சென்றார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்னூரில் சாலையோரத்தில் பச்சிளம் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Next Story