வீட்டுக்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு மீட்பு
துடியலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது
கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரன் நகரில் வசித்து வருபவர் ஜெய்பால். இவருடைய வீட்டிற்குள் வெள்ளை நிற பாம்பு ஊர்ந்து சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அருகே சென்ற போது அந்த பாம்பு சீறியது. மேலும் அந்த பாம்பு படம் எடுத்தது.
இதனால் அவர் கூச்சல் போட்டார். உடனே அருகில் வசிக்கும் ரவிக்குமார் என்பவர் விரைந்து வந்தார். அவர் துணிச்சலாக அந்த பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார்.
இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் வன ஊழியர் ராசுகுட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் அந்த வெள்ளை நிற பாம்பை மீட்டு, பாலமலை வனப்பகுதியில் விட்டார்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், மீட்கப்பட்ட வெள்ளை நிற பாம்பு 3.5. அடி நீளம் உள்ளது. இது நாகப் பாம்பு வகை சேர்ந்தது. அல்பினிசம் குறைபாடு காரணமாக அந்த பாம்பு வெள்ளை நிறத்தில் இருக்கிறது என்றனர்.