கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பெண் மீட்பு


கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பெண் மீட்பு
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த பெண் மீட்கப்பட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள வசந்தவேணி நாச்சியார் தெருவில் நேற்று காலை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி புஷ்பலதா (வயது 40) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் வளர்ந்திருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் கீழே விழுந்து கிடந்துள்ளது. சாலையோரத்தில் கிடந்த தேங்காயை கண்ட புஷ்பலதா அதனை எடுப்பதற்காக சென்றார்.

தேங்காய் கிடந்த இடத்தின் அருகில் பழைய கழிவுநீர் தொட்டி இருந்தது. அதன் மீது நின்றபடி அவர் தேங்காயை எடுக்க முயன்றபோது கழிவுநீர் தொட்டி உடைந்து புஷ்பலதா உள்ளே விழுந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்க முயன்றனர். சுமார் 20 அடி ஆழத்தில் விழுந்ததால் அவரை தூக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் நீண்ட நேரம் போராடி புஷ்பலதாவை மீட்டனர். தொட்டிக்குள் விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story