திருத்தணி அரசு பள்ளி அருகே காயங்களுடன் வாலிபர் மீட்பு; போலீஸ் விசாரணை
திருத்தணி அரசு பள்ளி அருகே காயங்களுடன் வாலிபர் மீட்கபட்டார்.
திருத்தணி ஆறுமுகசாமி கோவில் தெருவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல மாணவிகள் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக்கு அருகில் உள்ள வீட்டின் மாடியில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதைக் கண்டு மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் ரத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அடிபட்டு கிடந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி (வயது 30) என தெரிந்தது. அவர் எப்படி அங்கு வந்தார்? அவரை யாரேனும் தாக்கினார்களா? என பல்வேறு கோணங்களில் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.