முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு கலெக்டர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டா் மோகன் தெரிவித்துள்ளார்.
2022-23-ம் கல்வியாண்டிற்கு முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்புகள், பி.எஸ்.சி. (நர்சிங்), பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எப்.எஸ்.சி., ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க முன்னாள் படைவீரரை சார்ந்தோர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெறுதல் வேண்டும். இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகு சான்று, அடையாள அட்டை, சார்ந்தோர்களின் பள்ளி இறுதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், முன்னாள் படைவீரர், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக exwelvpm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சார்ந்தோர் சான்று
மேலும் சென்ற கல்வியாண்டில் பெற்ற சார்ந்தோர் சான்றிதழை இந்த கல்வியாண்டில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்படும்பட்சத்தில் கலந்தாய்வின்போது தங்களின் மகன், மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
அதுமட்டுமின்றி சார்ந்தோர் சான்று பெறுவதற்கு உரிய சான்று பதிவேற்றம் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனரை 04146- 220524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு உரிய விவரம் அறிந்து பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.