ஊராட்சி அலுவலகத்தில் குடியேறிய பொதுமக்கள்


ஊராட்சி அலுவலகத்தில் குடியேறிய பொதுமக்கள்
x
சேலம்

மேச்சேரி

ஜலகண்டாபுரம் அருகே சாலை வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறினர்.

சாலை வசதி

ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி ஊராட்சி சேவியூர் காட்டுவளவு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வெளியிடங்களுக்கு அங்குள்ள தனியார் விவசாய நிலத்தின் வழியாக சென்று வந்தனர். இந்தநிலையில் அந்த நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொருவர் விலைக்கு வாங்கினார். மேலும் அவர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்தார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் பாதை திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பாதையில் குழி தோண்டி, யாரும் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டது. இதுகுறித்து நேற்று அந்த பகுதி பொதுமக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

குடியேறும் போராட்டம்

பின்னர் சாலை வசதி கேட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என 70-க்கும் மேற்பட்டோர் சூரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்களுடன் குடியேறினர். மேலும் சாலை வசதி செய்து தரும் வரை, ஊராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு சமையல் செய்து சாப்பிட்டனர்.

அவர்களுடன் வருவாய்த்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்களின் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. சாலை வசதி கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. :-


Next Story