சாலை வசதி கேட்டு மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்
விஸ்வநாதபுரம் பகுதிக்கு சாலை வசதி கேட்டு மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேறும் போராட்டம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் என்று அழைக்கப்படும் சுப்பன் ஆசாரிக்களம் என்ற பகுதி உள்ளது. இந்தநிலையில் விஸ்வநாதபுரம் பகுதியில் தார் சாலை வசதி அமைத்து கொடுக்க வலியுறுத்தி நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் பள்ளி, மாணவ-மாணவிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு வந்து மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மற்றும் மருதூர் பேரூராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பலமுறை மனுக்கள்
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தார் சாலை வசதி அமைத்து கொடுக்க வலியுறுத்தி மருதூர் பேரூராட்சி, குளித்தலை வருவாய்த்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்களே தவிர தற்போது வரை இப்பகுதியில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை, என்றனர். இதையடுத்து அவர்களிடம் பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், விஸ்வநாதபுரம் பகுதிக்கு செல்லும் சாலை தனியாருக்கு சொந்தமான சாலை என்றும், அச்சாலை மருதூர் பேரூராட்சிக்கு ஒப்படைக்கும் பட்சத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பேரூராட்சி நிர்வாகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட இயலாது என தெரிவித்தனர்.
இன்றும் நடக்கும்
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அப்படி எனில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு கடிதம் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்று (வியாழக்கிழமை) குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இப்பிரச்சினை தொடர்பாக மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.