சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி


சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
x

சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சென்னை

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் செய்த கனமழையால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. நங்கநல்லூர் டெலிகிராப் காலனியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.

மேலும் அந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார்.

நங்கநல்லூர் 5-வது பிரதான சாலையில் ராட்சத மரம் விழுந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாநகராட்சி ஊழியர்கள், விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணப்பாக்கம் பகுதியில் கனமழை காரணமாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வரும் பல தெருக்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தற்காலிக சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடாது பலத்த பெய்தது. தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா, மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை அட்டவணைப்படுத்தி அதிகாலை 2½ மணிக்கே மாநகராட்சி ஊழியர்களை உஷார்படுத்தினார்.

அதன்படி கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ெரயில்வே சுரங்க பாலம் பகுதியில் ஊழியர்கள் மீட்பு பணியை தொடங்கினர். மழை நீர் தேங்காமல் மோட்டார்கள் மூலம் தண்ணீரை உடனடியாக வெளியேற்றினர்.

இதே போல ஈஸ்வரி நகர் சுரங்கப்பாதை பகுதியிலும் மழை நீர் வெளியேற்றப்பட்டது. இரும்புலியூர் டி.டி.கே. நகர் பகுதியில் சாலையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியிலும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு ஒரு மணி நேரத்தில் அந்த பகுதி சீரமைக்கப்பட்டது.

கனமழை காரணமாக கிழக்கு தாம்பரம்-வேளச்சேரி சாலை, முடிச்சூர் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, பெருங்களத்தூர் பஸ் நிலையம், தாம்பரம் பஸ் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி சார்பில் பம்மல், அனகாபுத்தூர், பல்லாவரம் செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர் பகுதியில் மழை நீர் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு தெருவில் நேற்று மாலை பலத்த காற்று வீசியதால் சாலையோரம் நின்ற மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த சாலையில் பெரிய பள்ளமும் ஏற்பட்டது. மரம் சாய்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் 2 மணிநேரம் போராடி சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் அந்த பள்ளத்தை மூடி சரி செய்தனர்.

இதே போல் ராயபுரம் பகுதி மன்னர்சாமி கோவில் தெருவில் உள்ள மரம் காற்றில் முறிந்து விழுந்தது. தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். மரம் விழுந்த போது அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.


Next Story