இந்திக்கு தாய்ப்பால்... மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால்... - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டம்


இந்திக்கு தாய்ப்பால்... மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால்... - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2022 1:37 PM IST (Updated: 18 Oct 2022 1:37 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பாஜக அரசு இந்திக்கு தாய்ப்பாலும் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்டுவதாக முதல்-அமைச்சர் கூறினார்.

சென்னை,

இந்தி திணிப்பு தொடர்பான பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசின் தனித்தீர்மானம் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்கள் நாம். ஆளும் பாஜக அரசானது இந்தி திணிப்பை தனது வழக்கமாக கொண்டுள்ளது. இந்தி மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவம், மற்ற மொழிகளை அழிக்கிறது. பல்வேறு இன, மொழிகளை உடைய இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி என திணிக்க முயற்சிக்கிறார்கள். ஒரு மொழி ஆதிக்கம் கூடாது என இதுவரை இருந்த பிரதமர்கள் உணர்ந்து இருந்தார்கள்.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில், இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த பாஜக துடிக்கிறது. கேவி பள்ளிகள் முதல் ஐஐடி வரை இந்தி மட்டும் தான் என்றால் மற்ற மொழி மக்களுக்கும் இந்த கல்வி நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இந்திக்காவகே துடிக்கிறது அவர்களது ( மத்திய பாஜக அரசு) இதயம். இந்தி மொழி பயன்பாடு அடிப்படையில் இந்தியாவை மத்திய பாஜக அரசு 3-ஆக பிரிக்க பார்க்கிறது. இந்தி மொழி பயன்பாடு அதிகம் உள்ள மாநிலங்கள், இந்தி மொழி பயன்பாடு குறைவாக உள்ள மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்று 3 ஆக இந்தியாவை பிரிக்கிறார்கள்.

நாம் (தமிழ்நாடு) 3-வதாக இருக்கிறோம். ஆனால், பெரும்மொழி மற்றும் பயன்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய நம்மை 3-ம் தர குடிமக்களாக ஆக்கக்கூடிய முயற்சிகளுக்கு நாம் எதிர்குரல் எழுப்பிட வேண்டும்.

இந்திக்கு தாய்ப்பாலும் இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு பேராபத்தை விளைவிக்கக்கூடியது. இந்தி மொழி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்' என்றார்.


Next Story