சொத்து வரியை குறைத்து தீர்மானம்


சொத்து வரியை குறைத்து தீர்மானம்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரியை குறைத்து சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரியை குறைத்து சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த மாதம் 17-ந்தேதி நடந்த கூட்டத்தில் சொத்து வரி, காலியிட வரிகளை குறைத்து மாற்றி அமைக்க தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனைத்து சொத்து வரி மற்றும் காலியிட வரி, புதிதாக வரி விதிப்பு செய்ய வரி இனங்களுக்கு அரை ஆண்டிற்கான சொத்து வரி, காலியிட வரிகளை குறைத்த மாற்றி அமைத்து கொள்ள அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை ஏற்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரி குறைப்பு எவ்வளவு?

அதன்படி 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள பரப்பளவு கொண்ட கட்டிடங்களுக்கு 25 சதவீதமும், 601-1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 50-ல் இருந்து 35 சதவீதமாகவும், 1201 முதல் 1800 சதுர அடி வரை பரபரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 75-ல் இருந்து 50 சதவீதமாகவும், 1800-க்கு மேல் பரபரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 100-ல் இருந்து 60 சதவீதமாகவும், வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு 100-ல் இருந்து 50 சதவீதமாகவும், தொழிற்சாலை, சுயநிதி பள்ளி, கல்லூரிகளுக்கு 75-ல் இருந்து 50 சதவீதமாகவும், காலியிட வரி 100-ல் இருந்து 60 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பேசும்போது கூறுகையில், பொதுமக்கள், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரி இனங்களை குறைக்க அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதேபோன்று தி.மு.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க. கவுன்சிலர்களும் வரி குறைப்பு தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.


Next Story