டிரைவருடன் கண்டக்டர் பதவிக்கான தேர்வுமுடிவுகள் நாளை வெளியீடு


டிரைவருடன் கண்டக்டர் பதவிக்கான தேர்வுமுடிவுகள் நாளை வெளியீடு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 Nov 2023 11:57 PM GMT (Updated: 25 Nov 2023 11:59 PM GMT)

டிரைவருடன் கண்டக்டர் பதவிக்கான தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.

சென்னை,

டிரைவருடன் கண்டக்டர் பதவிக்கான தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவருடன் கண்டக்டர் பதவிக்கான காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படுகிறது. இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தகுதி பெற்றவர்களுக்கும், (ஆன்லைன்) இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றவர்களுக்கும் என மொத்தம் 11 ஆயிரத்து 117 பேர்களுக்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய எழுத்துத் தேர்வு கடந்த 19-ந் தேதி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 20 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

மேற்படி எழுத்துத் தேர்வில் 9 ஆயிரத்து 352 பேர்கள் பங்கேற்றனர். ஆயிரத்து 765 பேர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவில்லை. எழுத்துத்தேர்வுக்குரிய விடைக் குறிப்பு அண்ணா பல்கலைக் கழக இணையதளம் https://tancet.annauniv.edu/tancet/setc/index.php-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் மதிப்பெண் www.arasubus.tn.gov.in வழியாக மேற்படி இணையதளத்திலேயே 27-ந் தேதி (நாளை) காலை 09.30 மணியளவில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உபயோகித்து ஓ.எம்.ஆர். விடைத்தாளை சரிபார்த்துக் கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு மதிப்பெண் வெளியீட்டிற்கு பின்னர், போக்குவரத்துத்துறை அரசாணைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு, டிரைவர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது கல்வி தகுதி, வயது, சாதி, டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றில் தகுதியானவர்கள் மட்டுமே டிரைவர் நடைமுறை தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.

மேலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் (கே) துறை அரசாணை வழிகாட்டுதல் படி முன்னுரிமை பெற்றோருக்கும், முன்னுரிமையற்றோருக்கும் இடையேயான 1:4 என்ற விகிதாசாரம் இனவாரியாக கடைபிடிக்கபடுவதுடன், மனிதவள மேலாண்மை (கே.2) துறை அரசாணையின்படி முன்னுரிமை பின்பற்றப்பட்டு பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்பதும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story