ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. வீட்டில்ரூ.4 லட்சம் நகை கொள்ளை
திருக்கோவிலூரில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி. வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மீனாட்சி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவி உமாமகேஸ்வரியுடன் கடந்த 25-ந்தேதி சென்னையில் தங்கி படித்து வரும் தன்னுடைய இளைய மகனை பார்க்க சென்றார். பின்னர் நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது ராஜேந்திரன் தனது வீட்டின் முன்பக்க கதவை திறக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
இதையடுத்து வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பூஜை அறையில் இருந்த பித்தளை சிலை ஆகியவற்றை காணவில்லை.
கதவை உள்பக்கமாக பூட்டினர்
இதற்கிடையே இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில் ராஜேந்திரன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் முன்பக்க கதவை உள்புறமாக பூட்டிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.