ஓய்வுபெற்ற அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம்
விழுப்புரத்தில் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 1.7.2022 முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படியை விரைந்து வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். பொருளாளர் கலியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருணகிரி தொடக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் துரைக்கண்ணு, துணைத்தலைவர்கள் சிவநேசன், கார்த்திகேயன் ஆகியோர் போராட்ட விளக்கவுரையாற்றினர்.
இதில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி மனித சங்கிலியாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் வட்ட இணை செயலாளர் பர்னபாஸ் நன்றி கூறினார்.