சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
கரூர் அருகே சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொழில்
கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் ஒரு வீட்டில் 16 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்வதாக பொதுமக்கள் மூலம் கரூர் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பெயரில், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, அங்கு 3 பெண் தரகர்கள், 5 வாலிபர்கள் இருந்தனர். இதையடுத்து அங்கிருந்த 16 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். பின்னர் அந்த 8 பேரையும் பிடித்து வந்து கரூர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
விசாரணையில், அவர்கள் கரூர் பகுதியை சேர்ந்த சாந்தி(வயது 42), மேகலா(42), மாயா(45) ஆகிய 3 பெண் தரகர்கள், கார்த்தி(28), கார்த்திகேயன்(27), சந்தோஷ்(30), சமுத்திரபாண்டி(27), கவுதம்(30) என்பதும், இவர்கள் 8 பேரும் சேர்ந்து கடந்த 6 மாதங்களாக சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 8 பேர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதற்கு கரூரை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.