போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வு கால பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் - அண்ணாமலை

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை, அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டிய பண பலன்கள் அனைத்தையும் நிறுத்திவைத்து, அவற்றை வழங்க எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல் தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது, தி.மு.க. அரசு.
15-வது ஊதிய ஒப்பந்தமே நிறைவேற்றப்பட வேண்டிய தருணத்தில், இன்னமும் 14-வது ஊதிய உயர்வே இன்றுவரை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. ஓய்வுபெற்ற சுமார் 87 ஆயிரம் பணியாளர்களுக்கு கடந்த 85 மாதங்களாக டி.ஏ. வழங்கவில்லை. 2021, 2022-ம் ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் என சுமார் 8 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி கடந்த ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் ஆட்சி மாற்றாத்துக்கு பிறகு திமுக அரசு இதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான ஓய்வு கால பண பலன்களை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






