வருவாயை பெருக்க நடவடிக்கை வேண்டும்
கானாடுகாத்தான் பேரூராட்சியில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி,
கானாடுகாத்தான் பேரூராட்சியில் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்மாதிரி பேரூராட்சி
தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளில் 22 பேரூராட்சிகள் முன்மாதிரி பேரூராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கானாடுகாத்தான் பேரூராட்சியும் ஒன்று. இப்பேரூராட்சி பகுதி பண்டைய, பாரம்பரிய கலாச்சார சிறப்புகளுடன், கலை நயமிக்க அறிவியல் பூர்வமான அமைப்புகளுடன் கட்டப்பட்ட பிரமாண்டமான வீடுகளை கொண்டது. இதற்காகவே ஐ.நா. சபையின் முக்கிய அங்கமான ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பில் (யுனெஸ்கோ) இடம் பெற்றுள்ளது. இதனால் உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கானாடுகாத்தான் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
ஆண்டு வருவாய்
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் நிறுவனர்களும் இப்பகுதியை சேர்ந்தவர்களே. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் இப்பகுதியை சேர்ந்தவரே. செட்டி நாட்டரசர் அரண்மனையும் இங்குதான் உள்ளது. வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் மையம், கால்நடை பண்ணை, அரசு மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின்போது இயங்கி வந்த ஏர்போர்ட் இப்பேரூராட்சி பகுதியில்தான் உள்ளது. இவ்வளவு சிறப்பு பெற்ற பகுதியாகவும் செல்வந்தர்கள் மிகுந்த ஊராகவும் உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ. 19 லட்சம் மட்டுமே.
எதிர்பார்ப்பு
ஆனால் இப்பேரூராட்சி இரு மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணத்திற்கு மட்டுமே ரூ. 6 லட்சம் வரை செலுத்த வேண்டியுள்ளது. மேலும் பல்வேறு நிர்வாக செலவுகள் உள்ளது. அனைத்தும் அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டிலேயே நடைபெற்று வருகிறது. கானாடுகாத்தான் பேரூராட்சியின் வருவாயை உயர்த்த அதன் செயல் அலுவலர் ரமேஷ் பாபு பல்வேறு வரைவு திட்டங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். கானாடுகாத்தான் பேரூராட்சி வருவாயை பெருக்க அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இங்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் பேரூராட்சியின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதோடு, பிற பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யலாம். அதன் மூலம் நிதி ஆதாரம் பெருகும். மேலும் வாரச்சந்தை, வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் கட்டி பேரூராட்சியின் வருவாயை பெருக்கலாம். அதன் மூலம் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தலாம். அப்போதுதான் உண்மையான முன்மாதிரி பேரூராட்சியாகும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.