வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.
தாசில்தார் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தது. இவற்றை கோர்ட்டு உத்தரவுபடி கடந்த 9-ந் தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்போது பட்டா இடத்தில் கட்டப்பட்ட 3 வீடுகளின் முன்பகுதி, அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது. அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின் மற்ற பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில் தனி தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காத்திருப்பு போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்பட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டியில் நடந்த போராட்டத்துக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், கோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்த தாசில்தாரை பணியிடை நீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது. அவர் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர். இதற்கிடையில் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக பல்வேறு அலுவலகங்களில் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.