வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்


வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

திருப்பத்தூர்

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி பேசியதாவது:-

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. மழை காலங்களில் கடந்த ஆண்டு கன மழையின் காரணமாக தண்ணீர் புகுந்த இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து வட்டாரங்களிலும் நிலுவையில் உள்ள நாற்றங்கால் உற்பத்தி பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும். மேலும் அரசுப்பள்ளிகள் அனைத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணிகள், சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள், தடுப்பணைகள், ஊராட்சி மன்ற கட்டிடங்கள், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகளின் கட்டுமான பணிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

இ-ஆபீஸ் மூலமாக...

மேலும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படும் அனைத்து அலுவலகங்களிலும் 100 சதவீதம் இ-ஆபிஸ் மூலமாக மட்டுமே அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி, (தணிக்கை) பிச்சாண்டி, உதவி திட்ட அலுவலர் செல்வன், உதவி செயற் பொறியாளர் மகேஷ்குமார், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story