கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: தொழிலாளர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்


கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: தொழிலாளர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும்
x

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது என்றும், தொழிலாளர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

சென்னை

நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பேரூரில் அமையவுள்ள 400 மில்லியன் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பூர்வாங்கப் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தொழிலாளர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

பின்னர் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:-

நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது. கடல்சார் பணிகள், எந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக, 2250 மில்லி மீட்டர் விட்டமுள்ள 1035 மீட்டர் நீளமுள்ள கடல்நீரை உட்கொள்ளும் குழாயில், 835 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலில் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது, மேலும் மீதமுள்ள 200 மீட்டர் நீளத்திற்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இக்குழாய் ஜூன் மாதம் இறுதிக்குள் கடலில் பதிக்கப்படும்.

இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாய் ஆகும் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீர் வெளியேற்றும் 1,600 மில்லி மீட்டர் விட்டமுள்ள 636 மீட்டர் நீளமுள்ள குழாயில் 600 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பொருட்டு, 48.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வலியுறுத்தியுள்ளோம்.

இந்த திட்டத்தால் தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனிததோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார், தலைமைப் பொறியாளர் எ.மலைச்சாமி, கட்டுமான நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள், வாரிய கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.மோகன், செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story